வெள்ளி, 5 நவம்பர், 2010

என் கவிதை - தாய் நாடு

கீழ் வானில் தோன்றிடும் ஒளியில்
கிளர்ந் தெழுந்து,
உழைப்பையே உயிர் எனக் கொண்டோம்!
உண்மையை வாழ்வெனக் கண்டோம்!
கனவுகள் சுமந்த ஒரு பயணம்
வாழ்வினில் களிப்பே எமது ஜனனம்…

கந்தையானாலும் கசக்கிக் கட்டி
கஞ்சியை வார்த்து வயிறு காய்ந்து
பட்ட கஸ்டத்திலும் நம்மை
சாக விட்டதில்லை தாய் நிலம்
முற்றத்து மாமரம் - மூன்று வேளைக்கு
ஒருவேளை உணவளிக்கும்
கிணற்றடி இலுப்பை
புது வருடத்திற்குப் புடவை தரும்

பூத்துக் குலுங்கும் மல்லிகை
வாசம்…
பூவை பறித்து அழகாய்த் தொடுத்து
வெள்ளிக் கிழமைகளில்
அயல் தெரு ஐயனார் கழுத்தில்
அணி செய்து வரம் வேண்டிடும் - காலம்
வருமோ நம் வாழ்வில்!


வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீர் அருந்த மனதினில் மோகம்
மறைவினில் நின்று நன்றே நனைந்து
மழையே மழையே மெத்தப் பெய்யென
மெத்தவே பாடி வெள்ளமடித்து…
நிறைந்த வயல் கிணற்றில் நீந்தி
அம்மா அடிப்பாள் என்ற அச்சத்தில்
நனைந்த ஆடைகளைக் களைந்து
வரம்பு மேடுகளில் போர்த்தி
கதிரவனின் கருனணயால் அவை காய
கதிர்களின் செழிப்பால் நம்
நிர்வாணம் மறைய…
இவை யெல்லாம் கனவல்ல நம் தாய்நிலத்தில்
நடந்தேறிய நிஜம்!

காகிதத்தில் கப்பல் செய்து
மாரிவெள்ளத்தை கடலாக்கி
அக் கடல் நடுவே ஓடவிட்ட
காலம் கரையவில்லை இன்றும்!

காலை நேர சாலை எல்லாம்
கதை சொல்லும்...
வெள்ளை மனம் வெள்ளை குணம்
வெள்ளை உடை உடுத்து
பள்ளி செல்லும் பாலகர்கள்
பாதை எங்கும் மழலை மொழி
மனது இனிக்கும் கண்குளிரும்
காட்சி அவை!


கண்களில் கனவுகள் சுமந்து
கண்ட போதெல்லாம் கனிவாய்ச் சிரித்து
உழைக்க விரையும் சோம்பல் மறந்த
உறவுகள் பலர் அந்த நினைவுகள்
சில - இன்றும்
மீட்டிப் பார்க்கும் போது சிலிர்க்கின்றது மெய்!


பக்கத்தித் தெரு பங்கஜம்
பெரியவளானதும் சடங்கு
அவள் வளர்ந்ததும் கெட்டி மேளம்
கொட்டி இல்வாழ்வுக்கு
அனுமதிக்கும் உறவுகள்
அவளின் கண்ணிய வாழ்வின் சாட்சியாய்
கையில் தவழும் குழந்தைக்கு
காது குத்தி கொழுக்கட்டை கொட்டி
முதல் அகவை கொண்டாடி
நூறகவை வாழ வாழ்த்தும்
தலை நரைத்தும் குணம் நரைக்காத
கூட்டங்கள் எம்மிடத்தில் மட்டும் தான்!

அயல் வீட்டு அம்பலத்தார் சாவு
அடுத்த தெரு வரை கேட்கும்
பறை, ஒப்பாரி ஓலம்
எட்டுக்கு மச்சம், முப்பத்தொன்றில்
துடக்கு நீக்கி சோறு கறி பாயாசம்...
சாப்பிட்ட வாய்க்கு போட்டுத் துப்பிய
வெற்றிலையின் ஈரம் காயாத மண்
எம் தாய் மண்


வேலியில் பொட்டிட்டு
பொட்டிட்ட மங்கைகள்
மாலையில் கூட்டம்
முற்றத்து வேம்பில் வெளிப்பட்ட
வேர்களில் அயலவர் கூட்டம்
உறவுக்கு வேர் சேர்க்கும்
உன்னத நாடு நம் தாய்நாடு!

கொஞ்சம் சண்டை
கொஞ்சம் மகிழ்ச்சி
துன்பமும் இன்பமும் வாழ்வின்
இரு பக்கங்கள் என்பதை
இனம் காண முடிகிறது
எம் மண்ணில்!

சந்திக்கு அடுத்துள்ள சந்துகளில்
சந்திக்கும் இளவட்டம் இனிதாய்
மொழி பேசி நம்மைக் கண்டதும் முழிக்கும்
நல்ல வேடிக்கை! நம் நாட்டில் வாடிக்கை!

பொன் மாலைப் பொழுதில்
வான மகள் நாணம் கொண்டு
வேறு உடை பூண்டு வர
பூமரங்கள் வீசும்
சாமரங்களுக் கிடையில்
பூவரசம் வேலிகளில் புலுனிக் குஞ்சுகளின் ஆட்சி
அந்தி மழையின் துளிகளுக்கு அஞ்சி
படையெடுக்கும் அந்துப் பூச்சிகளின் பட்டாளம்
இயற்கையே விருந்தளிக்கும் செந்தமிழ் நாடு
இன்பத் தேன் தந்த நாடு நம் நாடு!


வருடத்தின் பலநாளில்…
பாதி நாட்கள் மச்ச உணவு
மீதி நாட்கள் கோயில் திருவிழா
காண்டா மணி ஓசை!
ஐயரின் மந்திரச் சத்தம்!
வேட்டிகள் தொங்கும் வீட்டுக் கொடிகள்!
விசிலடிக்கும் சின்னப் பையன்கள் கூட்டம்!
சாலை ஓரம் நீண்டிருக்கும் பெட்டிக் கடைகள்!
கடல் கடந்து வந்தாலும் மறந்திட முடியுமா?


இன்னும் சங்கதிகள் பல
சொல்ல இனித்திடும்!
ஒரு வார்த்தையில் முடிக்கிறேன்
சொர்க்கமே என்றாலும் அது
நம் நாட்டுக்கு ஈடாகுமா?

3 கருத்துகள்:

  1. சொர்க்கமே என்றாலும் அது
    நம் நாட்டுக்கு ஈடாகுமா?
    சொர்க்கமே என்றாலும் அது
    நம் நாட்டுக்கு ஈடாகுமா?
    -சிறப்பு தோழர்
    குணத்தொகை
    தமிழ்நாடு.
    (99414 92701)

    பதிலளிநீக்கு